Saturday, May 20, 2006

முஹம்மது நபியின் திருமணங்கள் (பாகம் 3)

அல்லாஹ்வின் திருப்பெயரால் . . .

அன்பார்ந்த இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் . . .

அண்ணல் நபி (ஸல்) அவர்களை பெண் பித்தர் போன்று சித்திரம் வரைந்து வெளியிட்டது மேற்கத்தியர்களுடைய மததுவேஷத்தை வெளிப்படுத்திற்று, அல்லது அவர்களுடைய அறியாமையை வெளிப்படுத்திற்று என்று அறிந்து கொள்ளலாம், அதனடிப்படையில் அண்ணல் நபியவர்கள் பெண்பித்தராக இருந்திருப்பார்களேயானால் அவர்களது இளமைப்பருவத்தில் அவர்களை விட வயது முதிர்ந்த அன்னை ஹதீஜா ரலி அவர்களோடு வாழ்ந்த காலத்தில் பலபெண்களை மனந்திருப்பார்கள், ஆனால் அன்னையவர்கள் உயிரோடு வாழ்ந்த காலத்தில் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் அன்னை ஹதீஜா (ரலி) அன்ஹா அவர்களுடன் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பாசநேசத்துடன் வாழ்ந்த வாழ்க்கை வரலாறை சுருங்கப்பார்த்தோம், இப்பொழுது அண்ணல் நபி(ஸல்)அவர்களது அடுத்த திருமணங்களை சுருங்கப் பார்ப்போம்.

அன்னை ஸவ்தா (ரலி) அன்ஹா அவர்கள்

ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்களில் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களும் ஒருவராவார்கள், மக்காவில் இஸ்லாம் முளைவிட ஆரம்பித்த காலத்தில் முஸ்லிம்கள் இஸ்லாமிய எதிரிகளிடம் சொல்லொனா வசைமொழிகளுக்கும், கொலைவெறி தாக்குதலுக்குட் ஆளான காலகட்டத்தில் முஸ்லிம்கள் மக்காவை விட்டு அபிஸீனியவிற்கு இடப்பெயர்ச்சி ( ஹிஜ்ரத் ) செய்தபோது அதில் அன்னையவர்களும் அவர்களது கனவர் சக்ரான் பின் அம்ர் அவர்களும் இடம்பெற்றனர், அபிஸீனியாவிற்கு சென்று மிகவும் கஷ்டபட்டு குடும்பம் நடத்துகிறார்கள் ஒரு நாட்;டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதிகளாய் வருபவர்களுடைய நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்தளவுக்கு சிரமப்பட்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரேக் காரணத்திற்காக.

அன்னையவர்கள் அபிசீனியாவில் வாழ்ந்த நாட்களில் இருமுறை ஒரே அர்த்தத்தை பிரதிபலிக்கும் கணவை கான்கிறார்கள், ஒருநாள் அண்ணல் அவர்கள் அன்னையவர்களது இல்லத்தில் நுழைந்து, அன்னையின் கழுத்தைப் பற்றிப் பிடிப்பது போலக் கனவு கண்டார்கள். இன்னுமொரு சமயத்தில், அன்னையவர்களது மடியில் நிலவு வந்து இறங்குவது போன்றும் கனவு கண்டார்கள். தான் கண்ட கனவினைத் தனது கணவரிடம் எடுத்துரைத்த பொழுது, நான் இறந்தவுடன் நீ இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்வாய் என்று அந்த கனவுக்கு அவரது கணவர் விளக்கமளித்தார்கள். இன்னும் எனது மரணம் நெருங்கி விட்டது, எனது மரணத்திற்குப் பின் நீங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை மணந்து கொள்ளுங்கள் என்றும் அறிவுரை பகர்கிறார்கள். கூறிய சில நாட்களிலேயே நோய்வாய்ப்பட்டும் சக்ரான் (ரலி) அவர்கள் மரணமடைந்து விடுகிறார்கள். தனது கணவர் இறந்தவுடன் கைக்குழந்தைகளுடன் மக்காவுகு;கு திரும்பி விடுகிறார்கள்.

அன்னையவர்களின் தோழியர்களில் ஒருவரான கவ்லா பின்த் ஹகீம் (ரலி) என்பவர்கள் அன்றைய மக்களிடத்தில் அதிக நன்மதிப்பை பெற்றவர்களாயிருந்தார்கள், அன்னையவர்கள் கண்ட கணவை அவர்கள் அறிந்திருந்ததால் அவர்களை அண்ணல் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விட முனைப்புடன் செயல்படுகிறார்கள்.

ஒருநாள் கவ்லா (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களை சந்தித்து கணவரை இழந்து பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு தனிமையில் மிகவும் சிரமப்படும் அன்னை ஸவ்தா (ரலி) அவர்களது அவல நிலையையும், இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அடைந்திருக்கும் துன்ப நிலையையும் எடுத்துக் கூறி நீங்கள் கதீஜா (ரலி) அவர்களது நினைவிலேயே இருந்தால் என்னாவது ? நீங்கள் திருமணம் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்கள்.

என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்.

( பெண் பித்தராக அவர்கள் இருந்திருப்பார்களேயானால் குறைந்தபட்சம் தனது மனைவி இறந்த பிறகாவது அடுத்த மனைவியை தேடிக்கொள்ளும் வழியை கண்டறிந்து துணையை அடைந்திருப்பார்கள் மாறாக என்னை யார் மணந்து கொள்வார்கள், இன்னும் எனது மக்களையும் என்னைப் போலவே யார் கவனித்துக் கொள்வார்கள் என்று கேட்கிறார்கள். என்றால் ? அவர்களைப் பற்றின எந்த வரலாற்றுக் கிரந்தத்தை படித்து விட்டு அவ்வாறான ஒரு கேடுகெட்ட சித்திரத்தை வரைந்து தனது மதவெறியை தனித்திருப்பார்கள், அந்த கழிசடைகளுடன் இன்னும் பலரும் இணைந்து அயோக்கியத்தனத்திற்கு ஆதரவளித்திருப்பார்கள் ? என்பதை நடுநிலை சமுதாயம் சிந்திக்க கடமைப்பட்டுள்ளது. )

நீங்கள் திருமணம் முடித்துக் கொள்ளச் சம்மதித்தீர்கள் என்று சொன்னால், நான் உங்களுக்காக தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் பெண்ணை அணுகி அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டு திரும்புகின்றேன் என்று கவ்லா (ரலி) அவர்கள் கூறி இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தையும் பெற்றுக் கொண்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது சம்மதத்தைப் பெற்றுக் கொண்ட செய்தியை ஸவ்தா (ரலி) அவர்களிடம் கூறுகிறார்கள், அன்னையவர்கள் அபிசீனியாவில் இருமுறை கண்ட கணவையும், அவர்களது கணவர் சக்ரான் (ரலி) அவர்கள் இறப்பெய்வதற்கு முன்பு கணவுக்கு விளக்கமளித்ததுடன் அண்ணல் அவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதையும் நினைவு கூர்ந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறார்கள்.

திருமணம் நடந்தேறுகிறது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்னையவர்களுக்கு 400 திர்ஹம்களை மஹராகக் கொடுத்து மனமுடிக்கிறார்கள்.

அன்பிற்குரிய சகோதரர்களே !
இஸ்லாத்தின் எதிரிகள் கூறுவது போன்று அண்ணல் அவர்கள் ஒரு பெண் பித்தராக இருந்திருப்பார்களேயானால் தனது இரண்டாவது திருமணத்தையேனும் ஒரு கண்ணிப்பெண் மூலம் நடத்தி இருந்திருப்பார்கள், அவ்வாறில்லாமல் குழந்தைகளுடன் கணவனை இழந்த ஓர் விதவையை மனக்கொடை வழங்கி இரண்டாம் தாரமாக மனமுடித்துக் கொள்கிறார்கள்,
இது போன்று ஒரு சமுதாய சீர்திருத்தவாதியை, தீர்க்கதரிசியை உலகில் எவரையேனும் எவராலும் கோடிட்டு காட்ட முடியுமா ? அறவே முடியாது
வாய்கிழிய பேசுவார்கள் அவர்களுடைய சொந்த வாழ்விலே தோல்வியடைவார்கள், அல்லது மனமுடித்துக் கொள்ள மாட்டேன் எனும் பேர்வழிபோல் வேடம் போடுவார்கள், அந்தப் புறத்திலே யாருக்கும் தெரியாமல் சல்லாபிப்பார்கள், இது தான் இன்று நடந்து வருகிறது, அன்றும் நடைமுறையில் இருந்து வந்தது.

தானும் வாழவேண்டும், தன்னைப் போல பிறரும் வாழவேண்டும் இறைவனால் மனித சமுதாயம் படைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வேண்டும் எனும் நன்னோக்கில் விதவைகளுக்கும் தன்னைப் போல் தன் சமுதாயத்தவரும் வாழ்வளிக்க வேண்டும் உதவிக்கரம் நீட்ட வேண்டும்; எனும் அடிப்படையில் கைக்குழந்தைகளுடன் இருக்கும் விதவைக்கு மனக்கொடை வழங்கி வாழ்வுக்கரம் நீட்டிய அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களுடைய விதவை திருமணத்திலிருந்து மொத்த உலக சமுதாயமும் படிப்பினை பெறவேண்டும், அண்ணல் அவர்களுடைய ஒவ்வொரு அசைவுகளிலும் மனித சமுதாயத்திற்கு படிப்பினை உண்டு.
விதவைக்கும், ஏழைக்கும் உதவி செய்பவன் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்தவனைப்போலாவான். அல்லது இரவில் வணங்கி, பகலில் நோன்பு நோற்றவனைப்போலாவான். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) அவர்கள் நூல்: புகாரி

மேற்கூறிய விதம் அண்ணல் அவர்கள் செய்து காட்டியதால் அவர்களுடைய அவ்வறிவிப்பு பொண்ணெழுத்துக்களில் பொறிக்கப்படுபவையாக உள்ளது, மறுமையை நம்பி இறையச்சத்துடன் வாழும் முஸ்லிம்கள் இன்றும் அவ்வறிவிப்பின் படி விதவைக்கு வாழ்வளிப்பவர்களைக்கண்டு வருகிறோம், அண்ணல் அவர்களுடைய லட்சக் கணக்கான அறிவிப்புகளை இன்றும் எமது முஸ்லிம் சமுதாயம் பொண்மொழிகள் என்றே கூறுவர், காரணம் அவைகள் அனைத்தும் அவர்களது வாழ்வில் நடைமுறை படுத்தியவையாகவே இருக்கும் ஒன்று கூட அவர்களது வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதாக இருக்காது.

அல்லாஹ் நாடினால் மேலும் அண்ணலெம்பெருமானார் (ஸல்) அவர்களுடைய தியாகத்தில் அமைந்த மற்ற திருமணங்களை எழுதுவோம்.

- அதிரை ஏ.எம். பாரூக்

No comments: